மெகபூபா மகள் ஆட்கொணர்வு மனு அம்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்: மார்ச் 18ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி, அவரது மகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மார்ச்.18ம் தேதிக்குள் அந்த மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வீட்டுக்காவலில் இருக்கும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்காக, அவரது மகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “காரணமே இல்லாமல், மாநிலத்திற்கு பாதுகாப்பு என்று கூறி எனது தாய், வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை மீட்கும் விதமாக ஆட்கொணர்வு மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை அவசர வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரித்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க காஷ்மீர் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. ஏற்கனவே, பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டு காவல் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக, அவரது தங்கை சாரா முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்

Related Stories: