டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்ற சோனியா காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க முடியாமல் மத்திய அமைச்சர் திணறல்

டெல்லி : டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்ற சோனியா காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க முடியாமல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாதியில் வெளியேறினார்.டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லியில் பத்திரிக்கையாளர்களை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்தார். அப்போது டெல்லி வன்முறையை அரசியலாக்குவது தவறானது. அனைத்துக் கட்சிகளும் அமைதியை நிலைநாட்ட உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் டெல்லியில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யார் என்று அரசுக்கு தெரியும், யாரும் தப்பிக்க முடியாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அமித்ஷாவை ராஜினாமா செய்யக் கோரிய காங். கூற்று நகைச்சுவையானது, வன்முறையை கட்டுக்குள் வைக்கும் முயற்சியில் அவர் உள்ளதாக எடுத்துரைத்தார்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்க தொடங்கிய அவரிடம், டெல்லி பாரதிய ஜனதா நிர்வாகி கபில் மிஸ்ரா தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆர்எஸ்எஸ் அமைப்பினரோடு சேர்ந்து அவர் கலவரத்தை தூண்டியதாக எழுந்த புகார் குறித்து கேட்டனர்.டெல்லி பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் கபில் மிஸ்ரா மீது சாட்டிய குற்றச்சாட்டு மற்றும் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் கேள்வி எழுப்பினர். ஆனால் பதிலளிக்க திணறிய பிரகாஷ் ஜவடேகர், அனைவருக்கும் மிக்க நன்றி எனக் கூறி அங்கிருந்து நழுவினார்.இதே போல் டெல்லி கலவரம் குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சோனியா காந்தி பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த இது போன்ற கலவரங்கள் பல உண்டு என்றும் காங்கிரசின் கைகளில் சீக்கியர்களின் ரத்தக் கறை படிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.    

Related Stories: