கேரளாவில் அதிர்ச்சி சாலையோரம் கிடந்த பாகிஸ்தான் தயாரிப்பு துப்பாக்கி தோட்டாக்கள்: தீவிரவாத கும்பலுக்கு தொடர்பா?

திருவனந்தபுரம்: கேரளாவில்  தமிழக எல்லையோர சாலையில்  பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் திருவனந்தபுரம் - தென்மலை நெடுஞ்சாலையில் உள்ள  குளத்துப்புழா வனப்பகுதி சாலையோரத்தில் நேற்று முன்தினம் மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. இப்பகுதி, தமிழக எல்லையில் இருந்து 20 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த வழியக வந்த ஜோஷி, அஜீஷ் என்ற 2 வாலிபர்கள், அந்த பார்சலை திறந்து பார்த்தனர்.  அதில்  துப்பாக்கி  குண்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பார்சலில் 14 துப்பாக்கி குண்டுகள்  இருந்தன. 12 குண்டுகளில் ‘பிஓஎப்’ (பாகிஸ்தான்  ஆயுத தொழிற்சாலை) எனவும், 1980-1982ல் தயாரிக்கப்பட்டதாகவும் முத்திரை பொறிக்கப்பட்டு இருந்தது. 2 குண்டுகளில் தயாரிப்பு விபரம் இல்லை.

இந்த குண்டுகள்  ராணுவம், போலீசார் பயன்படுத்த கூடியவை. இவை நீண்ட தூர இலக்கை சுடுவதற்கு பயன்படுத்தும் 7.62 மி.மீ  குண்டுகள். இந்தியாவில்  தயாரிக்கப்படும் துப்பாக்கி குண்டுகள் ‘ஐஓஎப்’ என   குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குண்டுகளைத்தான் இந்திய ராணுவமும்,   போலீசும் பயன்படுத்தி வருகின்றன. சாலையோரம்  கிடைத்த 14 துப்பாக்கி குண்டுகளும் பிளாஸ்டிக் கவரில் வைத்து, அதன் மீது கடந்த மாதம் 28ம் தேதி வெளியான தமிழ், மலையாள நாளிதழ்கள் சுற்றப்பட்டிருந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் ராணுவ உளவுத்துறை, மத்திய உளவுத்துறை அமைப்புகளான என்ஐஏ, ரா மற்றும் ஐபி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். பாகிஸ்தான் குண்டுகள் இங்கு எப்படி வந்தது என்பது குறித்தும், இதில் தீவிரவாதிகள் கைவரிசை உள்ளதா எனவும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: