ஏலகிரி மலை பள்ளக்கனியூர் ஆற்றில் தனியார் விடுதிகளில் பயன்படுத்தப்படும் துணிகளை துவைப்பதால் தண்ணீர் மாசுபாடு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வசதிக்காக அரசு தங்கும் விடுதி ஒன்றும், 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. இந்நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளிலிருந்து அழுக்குத் துணிகளை ஆட்டோக்கள் மூலம் கொண்டுவந்து பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள ஆற்றில் துவைப்பதால் தண்ணீர் மாசுபட்டுள்ளது.

மேலும் இந்த தண்ணீரை, காட்டுப் பகுதிக்குள் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் குடிப்பதால் நோய்த்தொற்று ஏற்படுவதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுமட்டுமின்றி இந்தத் தண்ணீர் காட்டுப்பகுதியில் ஆறாக ஓடி ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கலப்பதால் அதில் குளிக்கும்  பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு துணிகளை துவைக்கும் நபர்களை அங்குள்ள பொதுமக்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இல்லாத நேரத்தில் ஆட்டோக்கள் மூலம் துணிகளை ரகசியமாக எடுத்து வந்து துவைத்து காயவைத்து எடுத்து செல்கிறார்களாம்.  மேலும் புங்கனூர் படகுத்துறை அருகிலும், நிலாவூர் ஏரி பகுதியிலும் துணிகளை துவைப்பதற்காக பல லட்சம் அரசு பணம் விரயம் செய்து வண்ணான் தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அப்பகுதியை யாரும் பயன்படுத்தப்படாமல் பயனற்றுக் கிடக்கிறது. எனவே இதுபோன்று பயனற்று கிடக்கும் அதிகாரிகள் வண்ணான் தொழுவத்தைபயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதேபோன்று காட்டுப்பகுதிக்குள் செல்லும் ஆற்றில் ஆட்டோக்கள் மூலமாக லோடு, லோடாக எடுத்துச்சென்று அழுக்கு துணிகளை துவைக்கும் தனியார் விடுதிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களால் தண்ணீர் மாசுபட்டு மக்களும், கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: