ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற மாட்டோம்: ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் பேட்டி

குவாலியர்: ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற மாட்டோம் என்று ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் கூறியுள்ளார். நூற்றாண்டு காலம் நடந்து வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77  ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்த உச்சநீதிமன்றம், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த அறக்கட்டளை வசம்  2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும். அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறக்கட்ளையின் தலைவராக மகந்த் நிரித்ய கோபால் தாஸ் மகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கோபால் தாஸ் மகராஜ் தலைமையிலான ராமர் கோயில் அறக்கட்டளை பிரதிநிதிகள் டெல்லியில் பிப்.20 அன்று பிரதமரின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமரை சந்தித்து விட்டு குவாலியர் திரும்பிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கோபால் தாஸ் மகராஜ், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் துவக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

மத நம்பிக்கை உள்ள அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இந்த பிரம்மாண்ட விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படும். ம.பி., முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப்படும். ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு தரும் நிதியை பெற போவதில்லை. பொதுமக்களின் பங்களிப்பையும், அவர்கள் வழங்கும் நன்கொடையை கொண்டே இந்த கோயில் கட்டப்படும். அரசுக்கு ஏற்கனவே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளது. இதில் நாங்களும் கூடுதல் சுமையாக இருக்க முடியாது. அயோத்தி வர பிரதமரை சந்தித்து அழைப்பு விடுத்தோம். எங்களின் அழைப்பு குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். பிரம்மாண்ட கோயிலை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: