மார்ச் 6ல் புறப்படுகின்றனர் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 3,004 பேர் பதிவு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் 3,004 பேர் பதிவு செய்துள்ளனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 7ம் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் இருந்து திருவிழாவில் பங்கேற்க 510 பெண்கள், 102 குழந்தைகள் உட்பட 3,004 பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களது சுய விபரங்கள் குறித்து  வருவாய், காவல்துறை மற்றும் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி இம்மாத  இறுதியில் அனுமதி வழங்கப்படும். மார்ச் 6ம் தேதி காலை 6 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து  77 விசைப்படகுகள், 25 நாட்டுப்படகுகளில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

திருவிழா ஒருங்கிணைப்பாளர் வேர்கோடு பாதிரியார் தேவசகாயம் கூறுகையில், ‘‘அந்தோணியார் திருவிழாவிற்கு படகில் செல்லும் பக்தர்கள் மது, புகையிலை, பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. அங்கு பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று இலங்கை அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரம் துறைமுகத்திலும் தற்காலிகமாக மருத்துவ முகாம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கச்சத்தீவு செல்ல பதிவு செய்துள்ளவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டை மற்றும் காவல்துறையினரின் தடையில்லா சான்று அவசியம் எடுத்து வரவேண்டும்’’ என்றார்.

Related Stories: