ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும்; மக்களை ஏமாற்ற சட்டம் கொண்டு வந்துள்ளனர்..வைகோ பேட்டி

மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக கொண்டுவந்துள்ள தமிழக அரசின் சட்டங்கள் குப்பைக்குத்தான் போகும் என வைகோ விமர்சனம் செய்துள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவை எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு இந்த பகுதி தரிசு நிலமாக மாறும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக மாற்றப்படும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதாவிற்கு  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்து சட்டமாகுமா என  கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வந்தே தீரும், அதை தடுக்க முடியாது. மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வரும் முடிவில் இருக்கிறது.  தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். நீட் தேர்வை எதிர்ந்து 2 முறை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி  போடப்பட்ட சட்டங்கள் எல்லாம் குப்பைத்தொட்டிக்கு தான் போனது. அதுதான் தற்போதும் நடக்கபோகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள்  திரண்டு போராட்டம் நடத்தவில்லை என்றால் தஞ்சை தரணி பாலை வனமாவதை யாறும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

Related Stories: