காங்கிரசின் கடும் எதிர்ப்பை ஓரம் கட்டி மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆணையர் நியமனம் : பிரதமர், அமித்ஷா அதிரடி

புதுடெல்லி : பல மாதமாக நிரப்பப்படாமல் இருந்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆணையராக (சிவிசி) ஜனாதிபதியின் செயலாளர் சஞ்சய் கோத்தாரியையும், தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்காவையும் பிரதமர் தலைமையிலான குழு பெரும்பான்மை முடிவு அடிப்படையில் தேர்வு செய்துள்ளது. நாட்டின் முக்கிய அமைப்பின் தலைவர்களை பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் குழு தேர்வு செய்கிறது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மக்களவை  காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர், ஊழல் கண்காணிப்பு ஆணையர், தலைமை தகவல் ஆணையர், தகவல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க பிரதமர் தலைமையிலான 3 பேர் குழு நேற்று கூடியது.

இதில், ஜனாதிபதிபதியின் செயலாளராக உள்ள சஞ்சய் கோத்தாரியை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராகவும் (சிவிசி), தற்போதைய தகவல் ஆணையர் பிமல் ஜூல்காவை புதிய தலைமை தகவல் ஆணையராகவும் பெரும்பான்மை முடிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு, அதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், பிரதமர் மோடி, அமித்ஷாவின் பெரும்பான்மை முடிவு அடிப்படையில், இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ரஞ்சனின் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டது. மேலும், ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் படேல், தவகல் ஆணையராக அனிதா பண்டோவே ஆகியோரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப்பின் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். குழுவின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி இக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், ‘‘இந்த நியமன நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை இல்லை. எனவே, இது சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார்.

Related Stories: