ஷாகின் பாக் போராட்டக்காரர்களுடன் உச்ச நீதிமன்ற சமரச குழு பேச்சு

புதுடெல்லி. ஷாகின் பாகில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பேச்சு நடத்த உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சமரச குழுவினர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு  எதிராக சாலையை மறித்து தொடர் போராட்டத்தில், டெல்லி  ஷாகின்பாக் பகுதியில் மக்கள் இரு மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள், நோயாளிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘‘அமைதியாகவும், சட்டத்துக்கு உட்பட்டும்  போராட அடிப்படை உரிமை உள்ளது. ஆனால், சாலையை மறித்து போராட்டம் நடத்துவது பிரச்னைக்கு வழிவகுக்கும்.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் மாற்று இடத்துக்கு போராட்டக்காரர்கள் செல்லலாம். இதுதொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்த மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டேவை நியமிக்கிறோம். வக்கீல் சாதனா ராமச்சந்திரன், முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா ஆகியோரின் உதவியை ஹெக்டே பெறலாம்’’ என்று கூறினர். இந்நிலையில், சாதனா ராமசந்திரன், மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ஷாகின் பாக் சென்று ேநற்று போராட்டக்காரர்களுடன் பேசினர். அப்போது அவர்கள், ‘‘போராட்டம் நடத்தும் உங்களது உரிமையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இதேபோன்று மற்றவர்களுக்கும் அடிப்படை உரிமை உள்ளது. அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உங்களது போராட்டம் இருக்க வேண்டும். உங்களது பிரச்னைக்கு சுமுக தீர்வு காண விரும்புகிறோம். உங்கள் அனைவரது கருத்துகளையும் கேட்க விரும்புகிறோம்’’ என கூறினர்.

Related Stories: