சிஏஏ-க்கு எதிராக 67 நாட்களாக தொடரும் போராட்டம்: ஷாகீன் பாக் மக்களுடன் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை

டெல்லி: சிஏஏ-க்கு எதிராக போரட்டம் நடத்தி வரும் ஷாகீன் பாக் மக்களுடன் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில்  வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து ஜனாதிபதியின்  ஒப்புதல் பெற்று, சட்டமாகவும் முழுவடிவம் பெற்றது. நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தெற்கு டில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் 67 நாட்களாக சாலையை மறித்து, தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்தை தடை செய்யும் வகையில் போராட்டங்கள் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது.  மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்துக்கு போராட்டத்தை மாற்ற வேண்டும். இது தொடர்பாக, போராட்டக்காரர்களுடன், மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே,  சாதனா ராமச்சந்திரன் பேச்சு நடத்துவர். முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வாஜாஹத் ஹபிபுல்லா, அவர்களுக்கு உதவுவார் என உத்தரவிட்டனர்.

அதன்படி, போராட்டக்களத்திற்கு சென்ற உச்சநீதிமன்றம் நியமித்த 3 பேர் கொண்ட குழு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது  பேசிய வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி இங்கு வந்துள்ளோம். ஒவ்வொருவரிடமும் பேசி அனைத்து பிரச்னைகள் குறித்தும் கேட்க  முயற்சிப்போம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த பிரச்னையில் முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர். மேலும், நீதிமன்றத்தின் ஆணையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும். எங்களின் எந்த முடிவையும் திணிக்க நாங்கள் வரவில்லை.  எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு என நீதிமன்றம் கூறியுள்ளது என்றார்.

இதற்கு அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது  என்றனர். இதற்கு பதிலளித்த குழு, ஆனால், நம்மளை போல சாலைகளை பயன்படுத்துவதற்கும், கடைகளை திறப்பதற்கும் மக்களுக்கு உரிமைகள் உள்ளன.  போராட்டத்தின் காரணமாக மக்கள் சாலையே பயன்படுத்த முடியாமால் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அனைவரும் பேசி எந்த பாதிப்பும்  இல்லாமல் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தின் நோக்கம் என்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை  வருவதற்கு முன்னதாக இந்த குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்ப்படுகிறது.

Related Stories: