பொய்யான தகவலை அளித்து ஆதார் எண் பெற்ற 127 பேருக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பொய்யான தகவலை அளித்து ஆதார் எண் பெற்ற 127 பேருக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை என்பது அத்தியாவசிய ஆவணமாக மாறிவிட்டது. பேடிம், ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ், ஆன்லைன் வங்கி சேவை, புதிய சிம் கார்டு வாங்குதல் என பல்வேறு வசதிகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பொய்யான தகவலை அளித்து ஆதார் எண் பெற்ற 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (uidai) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐதராபாத்திலுள்ள இந்திய தனித்துவ அடையாளம் ஆணைய அலுவலகத்தால் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.  இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியோருக்கு ஆதார் அளிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், இந்தநிலையில் பொய்யான தகவலை அளித்து 127 பேரும் ஆதார் எண் பெற்றிருப்பதாக போலீசாரிடம் இருந்து அறிக்கை வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி 127 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும், இதற்கும் குடியுரிமைக்கும் எந்த சம்பந்தமில்லை, புகார் உறுதியானால் ஆதார் எண் மட்டுமே ரத்து செய்யப்படும் என  ஆதார்  ஆணையம் கூறியுள்ளது.

Related Stories: