முதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரையை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்

* மாவட்ட கல்வி அதிகாரி மீது புகார்

* திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

கோவை:  கோவையில் முதன்மை கல்வி அலுவலரின் ஒரிஜினல் முத்திரையை போல் போலி முத்திரையை பயன்படுத்தி மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள், தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வித்துறையின் நிர்வாக வசதிக்காக கோவை கல்வி மாவட்டம், பேரூர் கல்வி மாவட்டம், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் என 4 கல்வி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் தனித்தனியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள், மாவட்டத்தில் செயல்படும் நர்சரி, பிரைமரி பள்ளிகள், தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், அங்கீகாரம் புதுப்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வார்கள். பின்னர், ஆய்வு தொடர்பான தகவல்களை முதன்மை கல்வி அலுவலருக்கு அளிப்பர். அவர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து அலுவலக முத்திரையை பயன்படுத்தி கையெழுத்திட்டு கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்வார். மேலும், பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தல் போன்றவைக்கு கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்ய தேவையில்லை. மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளிக்க முடியும்.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு என அரசு சார்பில் பிரேத்யேக அலுவலக முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இது பள்ளிக்கல்வித்துறையின் அலுவலக கோப்புகள், பள்ளிகளுக்கான தேர்வுகள், ஆசிரியர்களுக்கான ஆணைகள் மற்றும் பள்ளி அங்கீகாரம் தொடர்பான அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஒரிஜினல் முத்திரையை போல் போலி முத்திரை ஒன்று இருப்பது சிக்கியுள்ளது. இந்த போலி முத்திரை கருப்பு நிறத்தில் மரத்தினாலானது. இதனை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தி வந்துள்ளனர். ஆங்கில எழுத்தில் சீல் உள்ளது. தற்போது, இதுபோன்ற முத்திரை பயன்பாட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய முத்திரை நீல நிறத்தில் தமிழ் எழுத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பயன்பாட்டில் இல்லாத போலி முத்திரையை எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அதிகாரி பல தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும், மேலும் பல்வேறு பணிகளுக்கும் பன்படுத்தி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் வந்துள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரியின் வாகனத்தில் இருந்து தற்போது போலி முத்திரையை கல்வித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.

 இவர், கடந்த பல வருடங்களுக்கு முன்பு கோவை மெட்ரிக் பள்ளி ஆய்வாளராக இருந்தார். அப்போது, இந்த முத்திரை பயன்பாட்டில் இருந்து இருக்கலாம் எனவும், அதனை திருப்பி தராமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும், தற்போது அவர் எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி வகித்து வருகிறார். கல்வித்துறையின் மேலிடங்களில் செல்வாக்கு மிகுந்த நபராக இருக்கிறார்.  இதனால், இவரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.

ஆனால், தற்போது போலி முத்திரையை பயன்படுத்தி அவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முயற்சி எடுத்து வருகிறார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியில் இருந்து அய்யண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், நேற்று நாமக்கல் சென்று பணி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து புதிய முதன்மை கல்வி அலுவலராக நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தற்போது விடுமுறையில் இருக்கிறார். இதன் காரணமாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியில் பேரூர் மாவட்ட கல்வி அதிகாரி  சுப்புலட்சுமி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய முதன்மை கல்வி அதிகாரி வந்தவுடன் போலி முத்திரை தொடர்பான விசாரணை சூடுபிடிக்கும் என தெரிகிறது. மேலும், முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள், போலி முத்திரை பழையை முத்திரை எனவும், ஒரிஜனல் முத்திரைக்கும் இதற்கும் பல வித்தியாசம் உள்ளது எனவும் தெரிவித்தனர்.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக உரிய மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், போலி முத்திரையிட்ட கோப்புகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. கோவை கல்வித்துறை வட்டாரத்தில் போலி முத்திரை மோசடி விவகாரம் விஷ்வரூபம் எடுத்துள்ளது.

போலி முத்திரை கருப்பு நிறத்தில் மரத்தினாலானது. இதனை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தி வந்துள்ளனர். ஆங்கில எழுத்தில் சீல் உள்ளது. தற்போது, இதுபோன்ற முத்திரை பயன்பாட்டில் இல்லை. புதிய முத்திரை நீல நிறத்தில் தமிழ் எழுத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: