டி.வி. நிகழ்ச்சியில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் : வீட்டை விட்டு ஓடி வந்த 2 மாணவிகளை பத்திரமாக பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பிய ஆட்டோ டிரைவர்கள்

மும்பை: டி.வி. நிகழ்ச்சியில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு ஓடி வந்த 6ம் வகுப்பு மாணவிகள் இருவரை ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் மீட்டு அவர்களை பத்திரமாக மீண்டும் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூரு, ஆர்.டி. நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர் கடந்த 14ம் தேதியன்று பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டனர். பெங்களூரு ஸ்டேஷனுக்கு வந்த அவர்கள் மும்பை, குர்லா டெர்மினசுக்கு வரும் ரயிலில் ஏறி பயணம் செய்தனர். ஒரு மாணவியிடம் 150 ரூபாயும் மற்றொரு மாணவியிடம் 690 ரூபாயும் இருந்தது. பணம் குறைவாக இருந்ததால் அவர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்து மறுநாள் குர்லா வந்து சேர்ந்தனர். குர்லா டெர்மினசுக்கு வெளியே ப்ரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்ற மாணவிகள் அங்கிருந்த ஆட்டோ டிரைவர் சோனு யாதவை(28) அணுகி தங்களை அந்தேரி மேற்கில் உள்ள பிரபல டி.வி.நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தின் முகவரியை குறிப்பிட்டு தங்களை அங்கு விட்டுவிடுமாறு கூறினர்.

டிரைவர் சோனும் யாதவும் மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி அந்தேரிக்கு சென்றார். ஆனால், அந்த டி.வி. தொடர் தயாரிக்கும் அலுவலகத்தில் அன்று இன்டர்வியூ எதுவும் நடக்கவில்லை. மாணவிகளிடம் அவர்களது புகைப்படத்துடன் கூடிய விவரங்களை கொடுத்து விட்டுச் செல்லுமாறு அலுவலக வாட்ச்மேன் கூறியிருக்கிறார். இதனால், மாணவிகள் ஏமாற்றத்துடன் ஆட்டோவுக்கு திரும்பி வந்து டிரைவர் சோனு யாதவிடம் கூறினர். மேலும் அவரது செல்போனை வாங்கி மாணவிகள் யாருக்கோ போன் செய்தனர். ஆனால், மறுமுனையில் போன் எடுக்கப்படவில்லை. இதனால், மாணவிகளின் முகத்தில் கவலை படர்ந்தது. இதை கவனித்த சோனு யாதவ், மாணவிகளிடம் கனிவுடன் விசாரித்த போது, அவர்கள் உண்மையை கூறினர்.

அந்தேரி அலுவலகத்தில் டி.வி. தொடரில் நடிப்பவர்களை தேர்வு செய்ய இன்டர்வியூ நடக்க இருப்பதாக தங்களுக்கு தகவல் தெரியவந்ததாகவும், அதனால், டி.வி. நிகழ்ச்சியில் நடிக்கும் ஆசையுடன் தாங்கள் இருவரும் வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் கூறாமல் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு வந்ததாகவும் கூறினர்.

மாணவிகளை மீண்டும் குர்லா டெர்மினசுக்கு ஆட்டோவில் அழைத்து வந்த சோனு யாதவ், அம்மாணவிகளை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ப்ரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்ட் அலுவலகத்தில் அமர வைத்தார். பின்னர் மற்றோரு ஆட்டோ டிரைவரான குலாப் குப்தா(44) என்பவரின் உதவியுடன் மாணவிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வாங்கி கொடுத்தார்சோனு யாதவ். பின்னர் இரு ஆட்டோ டிரைவர்களும் தங்களது பணத்தில்(500) மாணவிகளுக்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அவர்களை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூருவில் உள்ள வீட்டுக்கு சென்றடைந்ததும் தனக்கு போன் செய்யுமாறு கூறி தனது செல்போன் நம்பரை மாணவிகளிடம் சோனு யாதவ் கொடுத்தனுப்பினார். மறுநாள் அந்த மாணவிகள் இருவரும் பத்திரமாக தங்களது வீடுகளை சென்றடைந்தனர். இரு மாணவிகளும் செல்போனில் சோனு யாதவை தொடர்பு கொண்டு தாங்கள் வீடு வந்து சேர்ந்து விட்ட விவரத்தை தெரிவித்தனர். மாணவிகளின் பெற்றோரும் சோனு யாதவிடம் பேசி அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி சோனு யாதவ் கூறுகையில், ‘‘2 மாணவிகளும் அந்தேரிக்கு ஆட்டோவில் சென்று வர தலா 290 கட்டணமாக கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், மாணவிகள் உண்மையான நிலையை தெரிந்து கொண்ட பிறகு அவர்களிடம் நான் பணம் வாங்கவில்லை. அவர்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்கள் வாங்கி கொடுக்க 200 செலவானது. பெங்களூருவுக்கு ரயில் டிக்கெட் எடுக்க 500 செலவானது. பணம் செலவானதை பற்றி நான் கவலைப்படவில்லை. அந்த இரு மாணவிகள் பத்திரமாக வீடு சென்றடைந்து எனக்கு போன் செய்த பிறகுதான் எனக்கு நிம்மதி கிடைத்தது’’ என்றார்.

Related Stories: