பயணம் முழுவதும் பயணிகளுக்கு பக்தி பரவசம்: ராமாயண கதை, பஜனையுடன் மார்ச்சில் புதிய ரயில் அறிமுகம்: ரயில்வே வாரியம் தகவல்

புதுடெல்லி: உட்புறம் முழுவதும் ராமாயண கதைகள், ராம பஜனையுடன் ‘ஸ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில், அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ரயில்வேயின் ஆண்டறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது. இதில், ‘ஸ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயிலை அறிமுகம் செய்வது தொடர்பாக குறிப்பிடப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ராமாயணா எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் வரும் மார்ச் 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயிலின் உட்புறம் முழுவதும் ராமாயண கதைகளின் கதாபாத்திர காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதோடு, ராம பஜனைகள் பயணம் முழுக்க ஒலிபரப்பு செய்யப்படும். ஹோலி பண்டிகைக்குப் பிறகு இதன் சேவை தொடங்கப்படும்,’’ என்றார்.

இதன் பயண வழித்தடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும், ராமர் பயணித்த முக்கிய வழித்தடங்களான நந்திகிராம், ஜனக்பூர், வாரணாசி, பிரயாக், சித்ரகூட், நாசிக், ஹம்பி, அயோத்தி மற்றும் ராமேஸ்வரம் என நாடு முழுவதும் பல்வேறு பகுதிகள், இந்த ரயிலின் பயணத்தில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், 800 பயணிகள் அமரும் வகையில் தயாரிக்கப்படும் இந்த ரயிலின் சேவை நவம்பர் 14ம் தேதி முதல் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: