கடலாடி பகுதியில் மினி பாரஸ்ட் அமைக்கும் பணி தீவிரம்

சாயல்குடி: கடலாடி ஒன்றியத்தில் பஞ்சாயத்து தலைவர்களின் முன்னிலையில் மினி பாரஸ்ட் அமைக்கும் பணியில் அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 பஞ்சாயத்துகள் உள்ளன. பஞ்சாயத்திற்கு ஒரு மினிபாரஸ்ட் எனப்படும் குருங்காடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பஞ்சாயத்திற்கு சொந்தமான காலி இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பயனுள்ள மரங்களை நட்டு மண் அரிமானத்தை தடுத்தல், மழைநீர் சேமிப்பு, மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் நோக்கத்திற்காக இந்த காடுகள் அமைக்கப்படுகிறது.

நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ், பணியாளர்களின் பங்களிப்போடு காலி இடம் சீரமைக்கப்பட்டு 4 மீட்டர் அகலம், 125 மீட்டர் நீளத்தில்நிலம் உழவாரப்படுகிறது. செம்மண், கரப்பை மண், இயற்கை உரம் போன்வற்றை இட்டு, சுற்றிவேலி அமைத்து, அதில் மா,கொய்யா, வாழை, சவுக்கு, தேக்கு. வேம்பு, பன்னீர், பாதாம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வகைளை சேர்ந்த மரங்கள், செடிகள் நடப்பட்டு, சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.3.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏர்வாடி, எஸ்.பி.கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் பணிகள் முடிந்து விட்டது. கடலாடி, எஸ்.கீரந்தை, ஆப்பனூர், எம்.கரிசல்குளம், மீனங்குடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் முன்னிலையில் பணிகள் நடந்து வருகிறது. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி ஆய்வு செய்து வருகிறார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், உதவி பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: