திருவிக நகர் அகரம் பகுதியில் மாநகராட்சி பூங்கா சீரமைப்பு

பெரம்பூர்:  சென்னை திருவிக நகர் 6வது மண்டலம் 67வது வார்டுக்கு உட்பட்ட அகரம் பகுதி தான்தோன்றி அம்மன் கோயில் தெருவில் ஆனந்தன் விளையாட்டு திடல் உள்ளது. செடி, கொடிகள் முளைத்து பராமரிப்பு இல்லாமலும், குடிகாரர்களின் ஆக்கிரமிப்பாலும் பொதுமக்கள் இந்த விளையாட்டு திடலை பயன்படுத்த முடியாத  சூழ்நிலையில் உள்ளது. இதுகுறித்த செய்தி கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு உடனடியாக பூங்காவை சரிசெய்து தரவேண்டுமென உத்தரவிட்டனர். அதன் பேரில் உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன் மேற்பார்வையில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக அந்த பூங்காவில் முளைத்திருந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்தி சாலைகளை சரி செய்து தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அந்த பூங்காவை சரி செய்துள்ளனர். விரைவில் இங்கு, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள்  ஏற்படுத்தி தரப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: