ஒயிட்வாஷ் செய்து பழிதீர்த்தது நியூசிலாந்து: ராகுல் சதம் வீண்

மவுன்ட் மவுங்கானுயி: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேன் வில்லியம்சன், மிட்செல் சான்ட்னர் அணிக்கு திரும்பினர். இந்திய அணியில் கேதார் ஜாதவுக்கு பதிலாக மணிஷ் பாண்டே இடம் பெற்றார். பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். அகர்வால் 1 ரன் மட்டுமே எடுத்து ஜேமிசன் வேகத்தில் கிளீன் போல்டாக, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி 9 ரன் எடுத்து பென்னட் பந்துவீச்சில் ஜேமிசன் வசம் பிடிபட, இந்தியா 32 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், பிரித்வி ஷாவுடன் இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடி 40 ரன் எடுத்த பிரித்வி ஷா (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஷ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தனர். அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் 62 ரன் எடுத்த நிலையில் (63 பந்து, 9 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து, ராகுல் - மணிஷ் பாண்டே ஜோடி 5வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க, இந்திய அணி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ராகுல் 104 பந்தில் சதம் விளாசி அசத்தினார். ராகுல் 112 ரன் (113 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), மணிஷ் 42 ரன் எடுத்து (48 பந்து, 2 பவுண்டரி) பென்னட் வீசிய 47வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷர்துல் தாகூர் 7 ரன்னில் வெளியேறினார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன் குவித்தது.

ஜடேஜா, சைனி தலா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் பென்னட் 4, ஜேமிசன், நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கப்தில், நிகோல்ஸ் இருவரும் துரத்தலை தொடங்கினர். நிகோல்ஸ் பொறுமையாக கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய கப்தில் 29 பந்தில் அரை சதம் அடித்தார். கப்தில் - நிகோல்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.3 ஓவரில் 106 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. கப்தில் 66 ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் கிளீன் போல்டானார்.

அடுத்து நிகோல்ஸ் - வில்லியம்சன் இணை 2வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. வில்லியம்சன் 22 ரன் எடுத்து (31 பந்து, 2 பவுண்டரி) சாஹல் சுழலில் அகர்வால் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய நிகோல்ஸ் 72 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். ராஸ் டெய்லர் 12 ரன், நிகோல்ஸ் 80 ரன் (103 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்க, நியூசிலாந்து 32.5 ஓவரில் 189 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது.

டாம் லாதம் - ஜேம்ஸ் நீஷம் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்தது. நீஷம் 19 ரன் எடுத்து சாஹல் சுழலில் கோஹ்லி வசம் பிடிபட்டார். கடைசி 10 ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 74 ரன் தேவைப்பட்டதால், இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். எனினும், லாதம் - கிராண்ட்ஹோம் ஜோடி நம்பிக்கையுடன் விளையாடி இந்திய பந்துவீச்சை சிதறடித்தது.

குறிப்பாக, கிராண்ட்ஹோம் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு 21 பந்தில் அரை சதம் விளாசினார். ஷர்துல் தாகூர் வீசிய 46வது ஓவரில் 20 ரன் கிடைக்க, ஆட்டம் நியூசிலாந்துக்கு சாதகமானது. அந்த அணி 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்து அபாரமாக வென்றது. லாதம் 32 ரன் (34 பந்து, 3 பவுண்டரி), கிராண்ட்ஹோம் 58 ரன்னுடன் (28 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாஹல் 3, தாகூர், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி, டி20 தொடரில் 0-5 என அடைந்த ஒயிட்வாஷ் தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. நிகோல்ஸ் ஆட்ட நாயகன் விருதும், ராஸ் டெய்லர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து லெவன் - இந்தியா மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஹாமில்டனில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

Related Stories: