பல ஆயிரம் கோடி புழங்கும் ஆன்லைன் வர்த்தகத்தின் போக்குவரத்து சந்தை குறிவைத்து நவீன பார்சல் பெட்டிகள் தயாரிப்பு: ரயில்வே தொழிற்சங்கம் கருத்து

மன்னார்குடி: தேஜாஸ், வந்தே பாரத், போன்ற ரயில்கள் மூலம் நவீன பயணிகள் பெட்டி களை ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. விரைவு ரயில்களை எல்எச்பி பெட்டிகளாக மாற்றி வருகிறது. பழைய ஐசிஎப் பெட்டிகள் உற்பத்தியை நிறுத்தி விட்டது. பயணிகள் பெட்டிகள் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் உயர வழிவகுத்து இருக்கிறது. அதுபோல் வர்த்தகர்களை ஈர்க்க நவீன பார்சல் பெட்டிகள் தயாரிப்பில் ரயில்வே இறங்கி இருக்கிறதா என அறிய வர்த்தகர்கள் மற்றும் ரயில் ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வம் நிலவுகிறது. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், பயணிகள் பெட்டிகள் அல்லாத 6500 பெட்டிகள் ரயில்வே வசம் உள்ளன. அதில் 1760 கார்டு மற்றும் லக்கேஜ் இணைந்த பெட்டிகள். 920 முற்றிலும் பார்சல்கள் ஏற்றும் பெட்டிகள்.

தொலை தூர ரயில்களில் இந்த பெட்டிகளுக்கு நல்ல கிராக்கி. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரயில்வே குத்தகைக்கு விட்டு லாபம் ஈட்டி வருகிறது. புழக்கத்தில் உள்ள பார்சல் பெட்டிகளில் போதிய வசதிகள் இல்லை. இடம் மிச்சமிருந்தாலும் அதிக பார்சல்கள் ஏற்ற முடியாது. இந்த பெட்டிகளில் வசதிகள் அதிகரிக்க குத்தகைதாரர்கள் கோரி வருகிறார்கள். இதனால் கூடுதல் பார்சல்கள் ஏற்றவதற்கு ஏற்ப நவீன வடிவமைப்புடன் கூடிய எல்எச்பி பார்சல் பெட்டிகளை கபுர்தாலா ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரித்து வருகிறது. இந்த பெட்டிகளை மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்கலாம், முற்றிலும் எவர் சில்வர் தகடுகள், குலுங்காமல் இருக்க காற்று குஷன், எல்இடி விளக்குகள், எளிதில் தீயணைக்க பையர் பந்துகள் வசதி, உருளும் தள்ளு கதவுகள் என பல அம்சங்கள் கொண்டது. இதை கடந்த ஜனவரி 30ம் தேதி டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் ரயில்வே வாரியத்தின் உறுப்பினர்கள் ராஜேஸ் அகர் வால் மற்றும் பிஎஸ்மிஸ்ரா ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

பார்சல்கள் அதிகம் குலுங்காமல், உடையாமல் எடுத்து செல்லவும், நிறைய சிறிய வகை பார்சல்கள் ஏற்ற இடவசதியும் கொண்ட பெட்டிகளை வடிவமைத்து தர பல ஆன்லைன் நிறுவனங்கள் வாரியத்தை அணுகின. கூரியர் நிறுவனங்களின் கட்டண உயர்வும் இதற்கு காரணம். இதனால் ஆன்லைன் பார்சல் ஏற்றும் பெட்டி களையும் வடிவமைத்து கபுர்தாலா ரயில்வே கோச் தொழிற் சாலை தயாரித்து வருகிறது. இதன் கொள்ளளவு 210 கன மீட்டர். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கலாம். உட்புறம் சில்வர் பார்வை தகடுகள். அதிக பார்சல்கள் ஏற்ற 32 மடக்கு தட்டுகள். 24 டன் வரை பார்சல்கள் ஏற்றும் வசதி. பெட்டிகளுக்கு 2.48 காலிபர் விகிதம் கொண்ட டிஸ்க் பிரேக்குகள். ரயிலில் எந்த பகுதியிலும் இணைக்கும் கப்லிங் அமைப்பு, எல்எச்பி பெட்டிகள் போல சிவப்பு மற்றும் வெளிர் சாம்பல் நிறம் என பல சிறப்பு அம்சங்கள் கொண்டது.

முதலில் இவைகளை தொலைதூர ரயில்களில் இணைப்பது, பின்பு தனி பார்சல் ரயில்களாக இயக்குவது வாரியத்தின் திட்டம். ஆண்டுக்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் நடக்கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. பல ஆயிரம் கோடி புழங்கும் ஆன்லைன் வர்த்தகத்தின் போக்குவரத்து சந்தையை குறிவைத்து ரயில்வே நவீன பார்சல் பெட்டிகள் தயாரிப்பில் களமிறங்குகிறது.

இவ்வாறு மனோகரன் கூறினார்.

Related Stories: