ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1.60 லட்சம் கோடியை வாங்கி 200 கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொடுத்தது ஏன் ? : மாநிலங்களவையில் ப. சிதம்பரம் சரமாரி கேள்வி

டெல்லி : 160 நிமிட பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற முயன்றது என்ன என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ப. சிதம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் நடவடிக்கையில் உள்ள தவறுகளை ஏற்க மறுப்பதுதான் முதல் குறை என்று தெரிவித்த ப. சிதம்பரம், பணமதிப்பு நடவடிக்கை ரத்து முதல் தவறு, கோளாறான ஜிஎஸ்டி வரி அமலாக்கம் அடுத்தத் தவறு என்றார். தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய அவர்,

பொருளாதாரம் படுமோசமான நிலையில் இருப்பதை மத்திய அரசு ஏற்க மறுப்பது தான் பிரச்சனை என்றும்

தொடர்ந்து 6 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி விதிதம் சரிந்து வருகிறது என்றும் கூறினார். மேலும் ப. சிதம்பரம் மாநிலங்களவையில் உரையாற்றியது குறிப்புகளாக பின்வருமாறு,

*முன் எப்போதாவது தொடர்ந்து 6 காலாண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதா ?வளர்ச்சிக் குறைவுக்கு காரணம் பொருளாதார அடிப்படையில் பிரச்சனையா ? இல்லை பொருளியல் சுழற்சியா ?

*பொருளாதார ஆய்வறிக்கையில் இருந்து ஒரு அம்சத்தை கூட நிதியமைச்சர் எடுத்துக் கொள்ளவில்லை. நிதிநிலை அறிக்கையில் பொருளாதார ஆய்வறிக்கைக் குறித்து குறிப்பிடக்கூடவில்லை.

*கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியும் 6 மாதங்களாக இறக்குமதியும் சரிந்து கொண்டு செல்கிறது.

*ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளுக்குப் பின்பும் முந்தைய ஆட்சியாளர்களை குறை கூறுவதா ? பொருளாதார சரிவுக்கு முந்தைய ஆட்சியே காரணம் என்று எவ்வளவு காலத்திற்கு கூறிக் கொண்டு  இருப்பீர்கள் ?

*சில்லறை விலை பணவீக்க விகிதம் 1.9% இருந்து 11 மாதத்தில் 7.4% ஆக உயர்ந்து உள்ளது.

*வேளாண்துறைக்கு வழங்கக்கூடிய கடன், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கும் கடன் தொகை எல்லாம் குறைந்துவிட்டது. பெரும்பாலான அடிப்படைத் தொழில்கள்  அனைத்தின் உற்பத்தியும் சுருங்கிவிட்டது. கனிம உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு உற்பத்தி, நிலக்கரி, கச்சா எண்ணெய் உற்பத்தி அனைத்தும் குறைந்துவிட்டன.

*நாட்டின் வரி வருவாய் குறைந்துவிட்டதால் செலவழிக்கவே மத்திய அரசிடம் பணம் இல்லை. சுங்க வரி வசூல் ரூ. 390 ஆயிரம் கோடி குறைவு, ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கை விட ரூ. 51,000 கோடி குறைவு

*பாஜக ஆட்சியில் பொருள்களுக்கான தேவையும் அதிகரிக்கவில்லை, தொழில் முதலீடும் உயரவில்லை.

*நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மக்களிடம் தெரிவிக்க அரசு ஏன் தயங்குகிறது ?

*நாட்டின் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1%ஆக அதிகரித்துவிட்டது.

*ஊரகப் பகுதிகளில் வேலையின்மை 5.3%ஆகவும் நகர்ப்புறங்களில் 7.8% ஆகவும் உள்ளது.

*வேலையின்மை அதிகரித்துவிட்டது குறித்த புள்ளிவிவர அறிக்கையை அரசு வெளியிடாமல் மறைத்தது ஏன் ?

*மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்ட 4.5 லட்சம் கழிவறைகளை காணவில்லை.

*இந்திய பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கூறுகிறார்.ஐசியூவில் உள்ள பொருளாதாரத்திற்கு தகுதியற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

*அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள பொருளாதாரத்தை சுற்றி நின்று சப்கா சாத்- சப்கா விகாஸ் என்று முழங்குவதால் என்ன பயன் ?

*நாட்டில் பொருள்களின் தேவையை அதிகரிப்பதற்கான எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை. மக்களின் கைகளில் பணம் கிடைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தால் தான் பொருள்களின் தேவை அதிகரிக்கும்.

*ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1.60 லட்சம் கோடியை வாங்கி கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொடுத்தது ஏன் ?

மத்திய அரசு 200 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணத்தை வாரி வழங்கி உள்ளது.

Related Stories: