திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நிலத்தை மீட்காததால் ஆகம விதிமீறி சாலையோரம் நிறுத்தப்படும் தேர்: சபாநாயகரிடம் அதிமுகவினர் புகார்

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் சன்னதி தெருவில் புகழ்பெற்ற  தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் அமைந்துள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்,  ஒவ்வொரு மாசி மாதமும் தேரோட்டம் நடைபெறும். விழா முடிந்ததும் இந்த தேர் சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். இந்த தேர் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்தது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால்  தேரோட்டம் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அறநிலையத்துறை சார்பில் ரூ.45 லட்சம் செலவில் 42 அடி உயரம் கொண்ட புதிய தேர் செய்யப்பட்டு, 2016ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று  வருகிறது.

ஏற்கனவே தேர் நிறுத்தப்பட்டு இருந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதால், புதிய தேர் நிறுத்துவதற்கு போதிய இடவசதியின்றி, தற்போது கோயிலுக்கு அருகில் குளத்தையொட்டி சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு அருகில் பொது கழிவறையும், ஈமச்சடங்கு கூடமும் இருப்பதால் இது சாஸ்திர முறைப்படி இங்கு தேரை நிறுத்துவது தவறானது என்றும், இதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பக்தர்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, சமபந்தி விருந்து நிகழ்ச்சி இந்த கோயில் சன்னதியில் நேற்று நடைபெற்றது. இதில், சட்டமன்ற சபாநாயகர் தனபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அங்கு வந்த திருவொற்றியூர் அதிமுக பகுதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள், ‘‘தற்போது தேர் நிறுத்தப்படும் இடம் ஆகம விதிப்படி தவறு. அருகில், சுந்தர விநாயகர் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தை மீட்டு, அங்கு திருத்தேரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்ட சபாநாயகர் தனபால், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,  பல ஆண்டுகளுக்கு முன், திருவெற்றியூர் சன்னதி தெருவில் பக்தர்களுக்காக ஏராளமான அன்னதானக் கூடங்கள், சத்திரங்கள், கழிவறை போன்றவை இருந்தன. ஆனால் தற்போது இந்த கோயில் நிலங்கள் அனைத்தும் போலி ஆவணங்கள் மூலம் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து அதில் கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இதனால் தேர் நிறுத்த  இடமில்லாமல் சாலையோரம் கொட்டகை அமைத்து, நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வெளியூரிலிருந்து இக்கோயிலில் திருமணம் செய்துகொள்ள வருகின்றவர்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய அளவிற்கு தங்கும் விடுதி,  கழிவறை போன்ற வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

 எனவே சன்னதி தெருவில் கோயில் நிலங்கள் குறித்து ஆய்வு செய்து தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பக்தர்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்கள் உருவாக்க வேண்டும்,’’ என்றனர்.திருவொற்றியூர் சன்னதி தெருவில் அன்னதான கூடங்கள், சத்திரங்கள், கழிவறை போன்றவை  இருந்தன. ஆனால் தற்போது இந்த கோயில் நிலங்கள் அனைத்தும் போலி ஆவணங்கள்  மூலம் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து அதில் கட்டிடங்களை கட்டி வாடகைக்குவிட்டுள்ளனர்

Related Stories: