நெல்லை, மாநகராட்சி 1வது வார்டு தச்சநல்லூர் சிதம்பராபுரம் பகுதியில் பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

நெல்லை: நெல்லை மாநகராட்சி 1வது வார்டு பகுதிகளான சிதம்பரநகர், ஹவுசிங்போர்டு காலனி, முத்து நகர், ஸ்ரீநகர், தென்கலம் உள்ளி பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் இங்கிருந்து சங்கர்நகர் தனியார் பள்ளி, மின்சார வாரியம், பாலிடெக்னிக் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை அரை கி.மீ. தொலைவிலான பகுதி நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். இச்சாலையானது முறையான பராமரிப்பின்றி சுமார் 10 ஆண்டுகளாக சேதமடைந்து வந்தது. மருந்துக்குக்கூட பராமரிக்கப்படாததால் தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது.

மேலும் இச்சாலையில் எஞ்சியுள்ள பகுதி சங்கர்நகர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்பகுதியிலும் சாலை முழுவதும் சேதமடைந்தே காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி வாகனங்கள் தட்டுத்தடுமாறிச் செல்கின்றன. குறிப்பாக இரு சக்கரவாகன ஓட்டிகள் வாகனங்ளை இயக்கவே கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைகாலத்தில் சாலையில் பயணிக்க முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் சாலையில் நடுவில் பள்ளத்தை நிரப்ப குப்பைகளை கொடிவைத்துள்ளனர். இந்த சாலையில் மின்சார விளக்குகளும் கிடையாது. எனவே, இரவு நேரத்தில் வாகனத்தில் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதுகுறித்து  மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள்  புலம்பி தவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், ‘‘தச்சநல்லூர் சிதம்பராபுரத்தில் துவங்கும் இந்த சாலை தாழையூத்து சங்கர்நகரில் முடிவடைகிறது. இந்த சாலையை தனியார் பள்ளி, பாலிடெக்னிக், மின்சார வாரிய அலுவலகம் செல்வோர் மற்றும் தாழைத்து செல்வோர் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உள்பட்ட அரை கிலோ மீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சுமார் பத்து ஆண்டுகளா சாலை பழுதடைந்த நிலையில்தான் உள்ளது. சிலர் சாலையில் காணப்படும் குண்டு குழியை குப்பைகளை கொண்டு நிரப்பி உள்ளனர். பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும்’’ என்றார்.

Related Stories: