சென்னை: பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த சிடி கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பதிவுத்துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு பத்திரப்பதிவு நிகழ்வின் போதும் வெப் கேமரா வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் காட்சிகள் சிடியில் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தரப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.50 சிடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு ரசீது தரப்படுகிறது.
