பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தமிழக அரசு மனுத்தாக்கல்

புதுடெல்லி: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், “பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை” எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Advertising
Advertising

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் குற்றவாளிகளின் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், மேலும் அதுதொடர்பான ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, குண்டர் சட்டத்தில் அடைத்த கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்து கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி உத்தரவிட்டது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,”பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்திய பின்னர் தான் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: