வௌிநாட்டு சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதியை சரி செய்யவே குடியுரிமை திருத்த சட்டம் வந்தது: என்சிசி மாணவர்களிடையே பிரதமர் பேச்சு

புதுடெல்லி: ‘வரலாற்று அநீதியை சரி செய்யவே, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்பட்டது,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து சில மாதங்கள் கடந்தும், இதை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை. இச்சட்டத்தை ஏற்க மறுத்து, பல மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், இச்சட்டத்தில் இருந்து பின்வாங்க முடியாது என மத்திய அரசு பிடிவாதமாக கூறி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் ஆண்டு பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:  சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீரில் சில பிரச்னைகள் தொடர்ந்தன. சில குடும்பங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அந்த பிரச்னையை உயிர்ப்புடன் வைத்திருந்தன. இதன் காரணமாக அங்கு தீவிரவாதம் ெசழித்து வளர்ந்தது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட தற்போதைய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

கடந்த 3 முறை நடைபெற்ற போரில் அண்டை நாடான பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. அதன் தீவிரவாத செயல்களால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்தனர். இப்போது, பாகிஸ்தானை தோற்கடிக்க நமது முப்படைகளுக்கு 10- 12 நாட்களுக்கு மேல் தேவைப்படாது. ஏற்கனவே வந்த போர்களில் தோற்றதால், பல ஆண்டுகளாக நமக்கு எதிராக மறைமுக போரை நடத்தி வருகிறது. இப்போது, இளமையுடன் கூடிய சிந்தனையுடன் வளர்ச்சி பெறும் நாடு உள்ளது. இதன் மூலம், சர்ஜிக்கல் தாக்குதல், விமான தாக்குதல் நடத்தியதுடன், தீவிரவாதிகளின்  வீட்டிற்குள்ளும் சென்று பாடம் புகட்டி இருக்கிறோம். குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள், பாகிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்படுபவர்களை பார்க்க மறுக்கின்றனர்.

அவர்களுக்கு நாம் உதவ வேண்டாமா? அண்டை நாடுகளில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதியை தீர்க்கவே, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, காஷ்மீர் மட்டுமின்றி பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி நிலவுகிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் வரலாற்று அநீதியை திருத்தியுள்ளது. மேலும், போடோ ஒப்பந்தம், முத்தலாக் சட்டம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவை எங்கள் அரசின் சாதனைகள். இவ்வாறு மோடி பேசினார்.

உணவு உற்பத்தியில் உலக சாதனை

குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று, ‘சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’ நடைபெற்றது. இதில், டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ‘‘மத்திய அரசின் சிறப்பான ெகாள்கைகள் காரணமாகவும், விவசாயிகளின் கடும் உழைப்பு காரணமாகவும், உணவு உற்பத்தியில் இந்தியா முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது. உலகளவில் சில உணவு தானிய உற்பத்தியில் முதல் 3 இடங்களில் இந்தியா வந்துள்ளது. வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த பல தீவிரமுயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ₹12000 கோடியை மத்திய அரசு செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது,’’ என்றார்.

Related Stories: