ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல்

டெல்லி: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. பி.ஆர். பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் ஜி.எச். மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை சுமார் 341 இடங்களில் வேதாந்தா மற்றும் ஓய்.எம்.பி.சி. நிறுவனங்கள் எடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கடந்த 16ம் தேதியன்று தனது சுற்றறிக்கையில் கூறியிருந்தது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் காவிரி டெல்டா பகுதியில் முற்றிலுமாக விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை உருவாகும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசுக்கு இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி தான் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயம் தான் 341 இடங்களில் வேதாந்தா மற்றும் ஓய்.எம்.பி.சி. நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கின்ற சுற்றறிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா? என்பது பற்றி தெரியவரும்.

Related Stories: