ஒரு உருண்டை சோற்றுக்கு கையேந்தும் நிலை வரும்: ஜெயராமன், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்

கடந்த ஜனவரி 16ம் தேதி மத்திய அரசு அரசிதழில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை 2006ல் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டனர். ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பது அபாயகரமான தொழிலை சேர்ந்தது என்பதால் குரூப் ஏ பிரிவை சேர்ந்தது. மக்களிடம் கருத்து கேட்பு நடத்தாமல் எங்கேயும் குழாய்களை நிறுவக்கூடாது. ஆனால், இதை பி பிரிவுக்கு மாற்றி, மக்கள் கருத்து கேட்கத் தேவையில்லை என்று திருத்தியுள்ளது. ஏற்கனவே, 4 சுற்று ஏலம் விடப்பட்டுள்ளது. அதில், 3 சுற்று ஏலத்தில் அதாவது கடந்த 2018ல் வெளியிட்ட ஏலத்தில் 5094 சதுர கி.மீ பரப்பளவில் விழுப்புரம் மரக்காணத்தில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வரை ஆழமற்ற கடல் பகுதியிலும், மக்கள் வாழும் நிலப்பரப்பிலும் கிணறுகள் அமைக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனம் உரிமம் பெற்று 341 கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், யாரிடமும் கருத்து கேட்கப்படவில்லை.

இரண்டாவதாக 2019ல் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் இருந்து நாகை மாவட்டம் கரியாப்பட்டினம்  வரைக்கும் 474 சதுர கி.மீ பரப்பளவில் ஐஓசி என்கிற நிறுவனம் ஏலத்தில் பெற்று கொண்டது. 3வது சுற்றில் நாகை மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் 1863 சதுர கி.மீ பரப்பளவில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி உரிமம் பெற்று கொண்டது. இவ்வளவும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தான். இதுவரை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து மக்களை கூட்டி, இந்த இடம் பாதிக்கலாம். இப்படி சரி செய்வோம் என்று அவர்களுக்கு உரிய பதிலை சொல்லி மக்கள் கருத்து கேட்பு நடத்தி அதை சுற்றுச்சூழல் துறையிடம் கொடுத்தால் தான் அவர்கள் சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுப்பார்கள். இது தான் நடைமுறை. ஆனால், இப்போது சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், கருத்து கேட்காமல் எண்ணெய் கிணறுகளை காவிரி படுகையில் அமைக்கலாம் என்று 2016ல் சுற்றுச்சூழல் அறிவிக்கையில் திருத்தம் செய்துள்ளது. இப்போது தமிழக அரசு இந்த அபாயகர திட்டம் வேண்டாம் என்று கடிதம் எழுதுவதற்கு பதிலாக இப்போது நீங்கள் செய்த திருத்தத்தில் இருந்து விலக்கு கொடுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கருத்து கேட்ைப எடுக்க வேண்டாம் என்று மட்டுமே கூறியுள்ளார்.

காவிரி படுகை காணாமல் போனால் ஒரு உருண்டை சோற்றுக்கு கையேந்தும் நிலை வரும் என்று எச்சரிக்கை  செய்யும் வகையில் இன்று  மயிலாடுதுறையில் மாலை 4 மணியளவில் கோரிக்கை ஆர்ப்பாட்டமாக நடத்துகிறோம். இதில், 3 முக்கிய கோரிக்கைகள் வைக்கிறோம். அதில், மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு, தமிழக அரசிடம் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரி என்று கோரிக்கை வைக்கிறோம். 3வதாக காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஏனென்றால், தமிழகத்தின் உணவு பாதுகாப்பை அது தான் காப்பாற்றும். படுகை அழிந்தால் தமிழகம் காணாமல் போகும். 5வது சுற்று ஏலம் முடிந்து கடலில் கிணறு அமைத்தால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால் மீன்கள் இறந்து போகும், இல்லையெனில் மீன்கள் இடம் பெயர்ந்து விடும். காவிரி படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி நாங்கள் கடந்த 2013 முதல் வலியுறுத்தி வருகிறோம். உலகம் முழுவதும் பாதுகாப்பு வேளாண் மண்டலம் இருக்கிறது. ஆனால், அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை.

Related Stories: