நிருபருக்கு மிரட்டல் விடுத்த கேரள மாஜி டிஜிபி உள்பட 9 பேர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் சென்குமார். கடந்த 2016ல் பினராயி விஜயன் தலைமையிலான  இடதுமுன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது அவர் மாற்றப்பட்டு லோக்நாத் பெக்ரா புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்குமாருக்கு மீண்டும் டிஜிபி பதவி வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு மீண்டும் டிஜிபி பதவி வழங்கப்பட்டது. இந்த  நிலையில் கடந்த 2017ல் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்குமார் மற்றும் எஸ்என்டிபி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது ரஷீத் என்ற நிருபர்  சென்குமாரிடம் ஒரு கேள்வி கேட்டார். இதில் சென்குமாருக்கும், நிருபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எஸ்என்டிபி அமைப்பை சேர்ந்த சிலர் நிருபர் ரஷீதை தாக்க முயன்றனர். இது தொடர்பாக ரஷீத் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் சென்குமார் மற்றும் எஸ்என்டிபி அமைப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: