கல்வி பயில ஜாதி சான்றிதழ் வேண்டும்: நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு வனவிலங்குகளுடன் காட்டு நாயக்கர் சமூக மக்கள் போராட்டம்

நெல்லை: ஜாதி சான்றிதழ் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு, கீரிபிள்ளை உள்ளிட்ட வனவிலங்குகளுடன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் தருவையில் சுமார் 50க்கு மேற்பட்ட காட்டு நாயக்கர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர்.  மற்றவர்களைப் போல தங்களது குழந்தைகளும் வாழ்வில் உயர பள்ளிகளில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் கல்வியைத் தொடர்வதில் சாதிச்  சான்றிதழால் சிக்கல் நீடிக்கிறது.

ஜாதி சான்றிதழுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் இந்த மக்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு, கீரிபிள்ளை  உள்ளிட்ட வனவிலங்குகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் தங்களால் உயர்கல்வியை தொடர  இயலவில்லை என்று வேதனை தெரிவிக்கும் காட்டு நாயக்கர் சமூக இளைஞர்கள்,  பலர் தங்களது கல்வியைப் பாதியிலேயே விட்டுவிட்டு தங்கள்  முன்னோர் செய்த தொழில்களைச் செய்யும் அவலநிலை தள்ளப்பட்டுள்ளதாக குமுறுகின்றனர்.

குறி சொல்லுதல் உள்ளிட்ட தொழில்களை செய்யும் போது காவல்துறை தங்களை களவு செய்வதாக கூறி கடுமையாக தாக்கும் அவல நிலையும்  இருந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மற்ற மாவட்டங்களில் உள்ள காட்டு நாயக்கர் சமூக மக்கள் ஜாதி சான்றிதழ் பெற்றிருக்கும் போது  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் இதுவரை சாதி சான்றிதழ் கொடுக்கப்படாதது ஏன் என்றும் தருவையில் வசிக்கும் காட்டு  நாயக்கர் சமூக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தங்கள் போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து மாவட்ட நிர்வாகம் ஜாதி சான்றிதழ் வழங்கும் என்ற  நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

Related Stories: