எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டம் வாபஸ் பெறப்படாது: அமித்ஷா திட்டவட்டம்

லக்னோ: ‘‘எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெறப்படாது,’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இச்சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அதே சமயம், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜ தரப்பில் ஆதரவு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று நடந்த குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் பற்றி காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றன. இச்சட்டம் குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே. மாறாக, யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்படாது.

இச்சட்டத்திற்கு எதிராக எவ்வளவு போராட்டங்கள் நடந்தாலும், திருத்த சட்டம் திரும்பப் பெறப்படாது.வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கண்மூடித்தனமான இச்சட்டத்தை எதிர்க்கிறது. அவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணாமுல் தலைவர் மம்தா ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன். குடியுரிமை சட்டம் பற்றி என்னுடன் பொது மேடையில் விவாதம் நடத்த அவர்கள் தயாரா? குடியுரிமை திருத்த சட்டத்தில் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் ஆகியவை இந்த சட்டத்துக்கு எதிராக தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. இந்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆகியோர் பொது அரங்கில் விவாதிக்க தயாரா?

காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது.

வங்கதேச பிரிவினையின்போது அந்த நாட்டில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமண மதத்தினர் ஆகியோர் 30 சதவீதம் பேர் இருந்தனர். பாகிஸ்தான் பிரிவினையின்போது அந்த நாட்டில் 23 சதவீத சிறுபான்மையினர் இருந்தனர். ஆனால் தற்போது இது வெறும் 7 சதவீதம் மற்றும் 3 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. மீதமுள்ள மக்கள் எங்கே போனார்கள் என இந்த சட்டத்துக்கு எதிராக போராடும் கட்சியினர் தெரிவிக்க வேண்டும். அயோத்தியில் விண்ணை தொடும் உயரத்துக்கு ராமர் கோயில் கட்டுமானப்பணி அடுத்த 3 மாதங்களில் தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: