ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் இருந்த 4 தலைவர்கள் விடுதலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையின்போது வீட்டு சிறையில் வைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் 4 பேரை அரசு விடுவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், இம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு இப்பகுதி அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின்னரும் வீட்டுக் காவலில் இருக்கும் தலைவர்களை அரசு விடுவிக்கவில்லை. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறியதோடு, அரசியல் தலைவர்களை விடுதலை செய்வது உள்ளூர் நிர்வாகத்தின் முடிவாகும் என கூறியிருந்தது.

இந்நிலையில், 5 மாதங்கள் வீட்டு காவலில் இருந்த மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அப்துல் ஹாக் கான், முன்னாள் துணை சபாநாயகர் நசீர் அகமத் குரேசி, மக்கள் மாநாட்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ முகமத் அப்பாஸ் வானி, காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அப்துல் ரசீத் உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் இருந்து நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: