கேரளாவை தொடர்ந்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் பேரவையில் தீர்மானம்

சண்டிகர்: கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின் இனத்தவர், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்காக கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, இடதுசாரிகள் ஆளும் கேரளா சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநிலத்தை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும் இதே போன்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக பஞ்சாப் சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் கூட்டப்பட்டது.

அதில், 2ம் நாளான நேற்று இந்த தீர்மானம் ெகாண்டு வரப்பட்டது. மாநில அமைச்சர் பிராம் மொகிந்திரா இதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், ‘‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் , ஜனநாயகத்தில் பிரிவினையையும், மதரீதியிலான பாகுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. இது தவிர மொழி மற்றும் கலாச்சார ரீதியாகவும் அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த சட்டம் அரசியலமைப்பு சட்ட உரிமையான, ‘அனைவரும் சமம்’ என்ற கருத்துக்கு எதிராகவும்  உள்ளது. எனவே, மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,’’ என்றார். இதைத் தொடர்ந்து நடந்த விவாதத்துக்குப் பிறகு, இந்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: