ஜாமீனுக்காக டெபாசிட் செய்த ரூ.20 கோடியை கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பி தர வேண்டும்: பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜாமீனுக்காக டெபாசிட் செய்த ரூ.20 கோடியை கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது ஏர்செல் மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ். மீடியா உள்ளிட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் கார்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது, மாதத்திற்கு தலா ரூ.10 கோடி வீதம் ரூ.20 கோடியை பிணைத்தொகையாக செலுத்தி விட்டு வெளிநாடு செல்லும்படி உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், இந்த பிணைத்தொகையை நீதிமன்றம் திருப்பித் தரவில்லை என குற்றம்சாட்டிய கார்த்தி சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertising
Advertising

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தேன். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜாமீன் தொகை செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என உத்தரவிட்டது. அதன்படி, ரூ.20 கோடி ஜாமீன் தொகை செலுத்தி இருந்தேன். ஆனால் வெளிநாடு சென்று வந்த பிறகு அந்த பணத்தை எனக்கு திரும்ப அளிக்கவில்லை. எனவே, நான் செலுத்திய ரூ.20 கோடியை திரும்ப வழங்கும்படி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீனுக்காக டெபாசிட் செய்த ரூ.20 கோடியை கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு செல்லும் போது கார்த்தி சிதம்பரம் செலுத்திய ஜாமீன் தொகையை திருப்பி தர பதிவாளருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: