முதல்வர் தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் தொடர்பான ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்ட குழுவின் 2வது கூட்டம்: 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி

சென்னை: முதல்வர் தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் தொடர்பான ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் 15 தொழில் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக் குழுவின் 2வது கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில், ரூ. 8,120 கோடி முதலீடுகளில், 16,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

நேற்று நடைபெற்ற 2வது கூட்டத்தில் பல்வேறு நிலைகளில் இருந்த 15 தொழில் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் ரூ. 6,608 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து, சுமார் 6,763 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை விரைவாக உருவாக்கும் வாய்ப்பு உறுதியாகி உள்ளது. இத்திட்டங்கள் தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்படும். 

Related Stories: