ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வங்கா நரிகளை பிடித்தால் 7ஆண்டு சிறை தண்டனை: மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை

சேலம்: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த, வனத்திற்குள் புகுந்து வங்கா நரிகளை பிடித்தால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கலையொட்டி பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதேபோல், ஒருசில பகுதிகளில் வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கு வனத்துறை அனுமதி வழங்குவதில்லை. சிலர் தடையை மீறி, வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்ட வனப்பகுதிகளில்  வங்கா நரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. வன உயிரினங்களை வேட்டையாடுதல் மற்றும் துன்புறுத்துதல் போன்றவை 1972ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான சட்ட விரோத செயலாகும். இதை மீறி வன உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது. எனவே பொதுமக்கள் எவரும் வங்கா நரியை பிடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: