மக்கள் சிகிச்சைக்காக 5 கி.மீ. செல்லும் அவலம் திரிசூலம் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்: பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திரிசூலம் ஊராட்சி சென்னை புறநகரில் இருக்கிற முதல் ஊராட்சி, சென்னை விமான நிலையத்திற்கு எதிரில் இருக்கிற மலையடிவாரத்தில் உள்ள கல்குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏனென்றால், அந்த பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு மருத்துவமனை கூட இல்லாத காரணத்தால், 5 கிலோ மீட்டர் தூரம் சென்று பொழிச்சலூர் ஊராட்சிக்கும், சென்னை, குரோம்பேட்டை மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையினுடைய செயலாளர் ஏற்கனவே பார்வையிட்டு சென்றிருக்கிறார். ஆனாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது அடிப்படை தேவையாக இருப்பதால், அதை கருத்தில் கொண்டு அங்கே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சர் முன்வருவாரா, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான கட்டிடங்கள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அது எப்போது திறக்கப்படும். அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: குரோம்பேட்டை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர் பலமுறை இந்த அவையில் கோரிக்கை வைத்தார். அதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் நிலையில்தான் இருக்கிறது. விரைவில் திறப்பு விழா காணப்படும். உறுப்பினர் குறிப்பிட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து அரசினுடைய ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: