கவர்னர் உரையில் தமிழக அரசுக்கு பாராட்டு தற்புகழ்ச்சி எப்போதும் தற்காலிகமானதே : மு.க.ஸ்டாலின் சூசகம்

சென்னை : சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  இந்த ஆளுநர் உரையில் பல்வேறு செய்திகளைச் சொல்லி தனக்குத் தானே புகழ்ச்சி உரை ஆற்றப்பட்டுள்ளது. ஆளுமைத் திறனுக்கான குறியீட்டுப் பட்டியலில், நாட்டிலேயே 18 பெரிய மாநிலங்களில் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளீர்கள். பாஜக ஆளும் மாநில அரசுகளை விட மத்திய அரசு என்ன சொன்னாலும் அதைக் கேட்டு நடக்கக்கூடிய முதல் அரசு நம்முடைய தமிழக அரசுதான். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் நாட்டிலேயே செயல்திறன் மிக்க மாநிலம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், இந்த ஆட்சியிலேதான் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரமும் தமிழகத்தில்தான் நடந்துள்ளது. முதல்வர் எடப்பாடி : உங்கள் ஆட்சியில் எத்தனை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தது என்ற புள்ளி விவரங்கள் எங்களிடம் உள்ளது. அதற்காக துப்பாக்கிச்சூடு என்பது விரும்பதகாத சம்பவம் தான். அதை அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.  

மு.க.ஸ்டாலின் : நிர்வாகத்தில் தூய்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்வதுதான், இந்த அரசின் முதன்மையான நோக்கம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், கடந்த காலங்களில் நடந்திருக்கும் ரெய்டுகள், கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்குகள், இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தால் உண்மை நிலை என்னவென்று தெரியும்? மேலும் சில தற்புகழ்ச்சிகளை வரிசைப்படுத்திச் சொல்லி இருக்கிறீர்கள். ஆட்சிக்கும், அரசியலுக்கும், பெரியோர் என்போர் வாக்காளப் பெருமக்கள்தான். அவர்கள் புகழ்ச்சிதான் உண்மையானது. நிரந்தரமானது. உள்ளத்தில் இருந்து வருவது. தற்புகழ்ச்சி எப்போதும் தற்காலிகமானதே. இதே பேரவையில், 13.2.1958 அன்று விவாதம் நடைபெறுகிறது. அப்போது அறிஞர் அண்ணா அதில் பங்கேற்று, சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார். ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம் என்று சொன்னால், இந்த ஆட்சியின் மீது உள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்த, தனிப்பட்ட முறையில் ஆளுநரை அவமதிப்பது ஆகாது என்று அண்ணா தெளிவாக குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

அண்ணா வழியைப் பின்பற்றித்தான் நாங்கள் அதைச் செய்திருக்கிறோம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இதே அவையில் 24.4.1962 அன்று ஆளுநர் உரை மீது விவாதம் நடந்தபோது, ‘எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நாங்கள் குறைபாடுகளை ஆளுங்கட்சிக்குச் சுட்டிக் காட்டி, அந்தக் குறைபாடுகளை நீக்கி நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கடமையாகக் கொண்டு ஆளுநர் உரையில் உள்ள குறைகளையும், நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம்.

Related Stories: