தீவுத்திடல் பொருட்காட்சிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க தரமான பிரசாதம் தயார் செய்ய வேண்டும்: கோயில் அலுவலர்களுக்கு இணை ஆணையர் அறிவுரை

சென்னை: சுற்றுலா பொருட்காட்சிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் தரமான முறையில் தயார் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா, கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை தீவுத்திடலில் தமிழக சுற்றுலா துறை சார்பில் கடந்த 22ம் தேதி முதல் சுற்றுலா தொழிற் பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சி வளாகத்தில் பல்வேறு அரசு துறைகளின் சாதனைகளை விளங்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இந்து சமய அறநிலையத்துறைக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு திருக்கோயில்களில் இருந்து பொங்கல், புளியோதரை, சுண்டல் போன்ற பிரசாதங்களும் வழங்க அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சுற்றுலா பொருட்காட்சியில் பெருவாரியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த பட்சம் 1000 பேருக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடுகள் செய்து, குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வந்து வழங்க வேண்டும்.

வழங்கப்பட உள்ள பிரசாதங்கள், சுண்டல்கள், புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவை கோயிலுக்கு ஏற்றவாறு இருக்கலாம். இத்துடன் அந்தெந்த கோயில் பழக்கவழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் விபூதி, குங்குமம், மஞ்சள், கற்கண்டு, போன்ற பிரசாதங்களையும் இணைத்து வழங்கலாம். பிரசாதங்கள் அனைத்தும் தரமான முறையில் தயார் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பிரசாதங்களை உரிய முறையில் பாக்கெட்டுகளாக மட்டுமே அளிக்க வேண்டும்.

பிரசாதங்களை கண்டிப்பாக பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டப்பாவில் வழங்க கூடாது. பிரசாத பாக்கெட்டுகளின் மீது அந்தந்த கோயில் பெயர் மற்றும் இறைவன், இறைவியின் படம் பொறிக்கப்படலாம். அதே போன்று விபூதி, குங்குமம் போன்ற பிரசாத பாக்கெட்டுகளிலும், பெயர், படம் பொறிக்கப்படலாம். இவைகளுடன் கோயிலின் படங்கள், தலவரலாறு, சிற்றட்டைகள் போன்றவையும் இலவசமாக வழங்கலாம். இவைகளை வழங்குவதற்கு இரு கோயில் பணியாளர்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: