ஜன.16ல் ஜல்லிக்கட்டு தயாராகும் பாலமேடு வாடிவாசல்

அலங்காநல்லூர்: பாலமேடு ஜல்லிக்கட்டு ஜன.16ல் நடைபெறுவதையொட்டி அங்குள்ள வாடிவாசல், கேலரிகளில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொங்கலுக்கு மறுநாள் (ஜன. 16ல்) பாலமேடுவிலும், அடுத்த நாள் (ஜன. 17) அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டையொட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அங்குள்ள மஞ்சமலை ஆற்று வாடிவாசல், கேலரிகளில் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மேலும் இரண்டடுக்கு தடுப்பு வேலி அமைப்பதற்காக ஆற்று பகுதியில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதற்கிடையே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் அதிகளவில் காளைகளை பதிவு செய்யாமல் குறைந்தபட்சம் 650 முதல் அதிகபட்சம் 700 காளைகள் வரை பதிவு செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பாலமேடு கிராம மகாலிங்க பொதுமடத்து கமிட்டி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர், பிடிபடாத காளைகளுக்கு சிறப்பு பரிசாக நாட்டு கறவை பசு, புல்லட், கார், உழவு இநய்திரம் உள்ளிட்ட உயர்ரக பரிசுகளும் மற்றும் வழக்கம்போல் கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், தங்கம், வெள்ளி காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. விழா ஏற்பாடுகளை ராஜேந்திரன், வேலு, மனோகரவேல் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: