புதுச்சேரியில் காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

திருவனந்தபுரம்: புதுச்சேரியில் 2 கார்களை பதிவு செய்து பல லட்சம் வரி ஏய்ப்பு செய்த நடிகரும், பாஜ எம்பியுமான சுரேஷ்ேகாபிக்கு எதிராக குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் வாகன பதிவு கட்டணம் குறைவு என்பதால் பலர் தங்களது ஆடம்பர சொகுசு வாகனங்களை அந்த மாநிலத்தில் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்பட அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் இவ்வாறு வாகனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனால் அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. புதுச்சேரியில் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த மாநிலத்தில் தங்கி இருக்க வேண்டும். இதற்காக இவர்கள்  போலி ஆவணங்களையும் தாக்கல் செய்கிறார்கள்.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் பகத் பாசில், நடிகை அமலாபால், நடிகரும், பாஜ எம்பியுமான சுரேஷ் கோபி ஆகியோர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து புதுச்சேரியில் தங்கள் வாகனங்களை பதிவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் மீது கொச்சி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நடிகர் பகத் பாசில், நடிகை அமலாபால் ஆகியோர் கேரளாவில் வரி கட்டி இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்து கொண்டனர். ஆனால் சுரேஷ் கோபி வரி எதுவும் கட்டவில்லை. இதையடுத்து  குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் கோபிக்கு எதிராக நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வரி ஏய்ப்பு மற்றும் போலி ஆவணங்களை தாக்கல் செய்தது ஆகிய குற்றங்கள் நடிகர் சுரேஷ்கோபி மீது சுமத்தப்பட்டுள்ளன. இதன்படி சுரேஷ் கோபிக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: