குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்

நாகர்கோவில்:குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பசுமை உரக்குடில்கள் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்தார். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பிரித்து வழங்கும் மக்கும் தன்மையுள்ள குப்பைகளை பசுமை உரக்குடில்களில் கையாண்டு உரம் தயாரிக்கும் பணியை அவர் பார்வையிட்டார். துப்புரவு பிரிவு அலுவலர்களுக்கு குப்பைகள் பிரித்து பெறப்படுவதின் முக்கியத்துவத்தையும் அறிவுறுத்தினார்.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட புளியடி மற்றும் வடசேரி, ராஜபாதை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பசுமை உரக்குடில்களை பார்வையிட்டார். மேலும் வட்டவிளையில் புதிதாக கட்டப்பட்ட பசுமை உரக்குடிலில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.  நாகர்கோவில் வலம்புரிவிளையில் 40 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரித்து மறு சுழற்சிக்கு பயன்படுத்த கூடிய பொருட்களை தொழிற்சாலைக்கு வழங்கவும், மறு சுழற்சிக்கு பயன்படுத்த இயலாத பொருட்களை சிமென்ட் ஆலைகளில் எரிபொருளாக பயன்படுத்தும் வகையிலும் பிரித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியையும் ஜோதிமணி பார்வையிட்டார்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மருத்துவ கழிவுகளை கையாளும் பணியையும் பார்வையிட்ட அவர் கழிவுகள் முறையாக கையாளப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, கலெக்டர் மூலம் நிதி பெற்று பணி தொடங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கன்னியாகுமரியில் தேசிய கொடி பறக்கவிட உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மாநகராட்சியின் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார், இன்ஜினியர் பாலசுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: