முரட்டு தோற்றத்தில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா, தனது பிரபல கார் மாடலான ஆக்டேவியாவின் அடுத்த தலைமுறை காரை விரைவில் அறிமுகப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்புதிய தலைமுறை ஆக்டேவியா காரில், அப்டேட் செய்யப்பட்ட ஸ்டைலிஷான புதிய கிரில் அமைப்பு மற்றும் ‘’எல்’’ வடிவிலான பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய இரட்டை எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. பரிமாண அளவுகளாக காரின் நீளம் 4,689 மி.மீ ஆகவும், அகலம் 1,829 மி.மீ ஆகவும், காரின் உயரம் 1,470 மி.மீ ஆகவும் உள்ளது. வீல்பேஸ் 2,686 மி.மீ அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. பனி விளக்குடன் உள்ள காரின் பம்பரும் புதிய டிசைனில் மாற்றப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள பம்பரும் முன்புற பம்பரின் டிசைனுக்கு ஏற்ற வடிவில் புதுமையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், இப்புதிய காரின் முன்புறம் மற்றும் பின்புற பகுதிகள் மிகவும் முரட்டுத்தனமான, அதே நேரத்தில் பார்ப்பதற்கு ஸ்டைலான தோற்றத்தை பெற்றுள்ளது.

இதுதவிர, இந்த கார் ஜன்னல்களில் கொடுக்கப்பட்டுள்ள பார்டர் நிறத்தையே சன்ரூப் பெற்றுள்ளது. நிறம் மட்டுமின்றி இவற்றின் தோற்றமும் முந்தைய மாடலில் இருந்து வேறுபடுகிறது. வழக்கமான ஸ்கோடா மாடல்களில் இடம்பெறும் வட்ட வடிவிலான லோகோவிற்கு பதிலாக எழுத்து வடிவிலான லோகோ கிரில்லின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. உட்புற பாகங்களில், பல அம்சங்கள் அப்டேட்டாக கொடுக்கப்பட்டுள்ளன. இன்போடெயின்மெண்ட் அமைப்புடன்கூடிய 10 இன்ச் தொடுதிரை மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்டவை இந்த காரின் உட்புற பாகங்களில் அடங்கியுள்ளன. இரு ஸ்போக்குகளை கொண்ட அதிகமான பல செயல்பாடுகளுக்கு உட்படும் வகையிலான ஸ்டீயரிங் வீல் இப்புதிய காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மூன்று ஸ்போக்குகளை கொண்ட வீல் அமைப்பும் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது. மைய கன்சோல் புதிய வடிவத்தை பெற்றுள்ளது. வழக்கமான கியர் லிவருக்கு பதிலாக ஸ்விட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, மில்ட்-ஹைப்ரீடு மற்றும் பிளக்-இன் போன்ற எரிபொருள் வகைகளில் இப்புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் வர உள்ளது. பெட்ரோல் மாடலானது 1.0 லிட்டர், 1.5 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் இன்ஜினுடனும், 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் மாடலானது 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடனும், பிளக்-இன் ஹைப்ரீட் மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடனும் வர இருக்கிறது.

இதில், 1.4 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜினுடன் விற்பனையாக உள்ள பிளக்-இன் ஹைப்ரீட் மாடலானது 204 எச்பி மற்றும் 245 எச்பி என இருவிதமான ஆற்றல் அளவுகளை வெளியிடும் திறன்கொண்டது. மைல்ட்-ஹைப்ரீட் மற்றும் பிளக்-இன் என இரு இன்ஜின்களும், 6 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் டீசல் இன்ஜின் ஆல் வீல் டிரைவ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வில் கொடுக்கப்படுகிறது.

சிஎன்ஜி வேரியண்ட்டில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 2.0 லிட்டர் இன்ஜின் மூன்று விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனில் வர இருக்கிறது. இதனுடன் 6 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக நிலைகளை வழங்கக்கூடிய டியூவல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்பட்டுள்ளன. முக்கிய உதிரிபாகங்கள் சிகேடி முறையில் இந்தியாவில் இறக்குமதியாகி அசெம்பிள் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இப்புதிய கார் விற்பனைக்கு வர உள்ளது. 16 லட்சம் முதல் 22 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.

Related Stories: