சிறுமி பலாத்காரம் - கொலை வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை: l கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு l சம்பவம் நடந்த ஒன்பதே மாதத்தில் அதிரடி

கோவை: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை ேபாக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் நடந்த ஒன்பதே மாதத்தில் தீர்ப்பு வழங்கியதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். கோவை பன்னிமடையை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தம்பதியின் முதல் குழந்தையான 7 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி பள்ளிக்கு சென்றிருந்தார்.  மாலையில் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தடாகம் போலீசில் புகார் அளித்தனர். ேபாலீசார் விசாரணை நடத்தி, மறுநாள் காலை சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள சந்து பகுதியில் சிறுமியை சடலமாக கண்ெடடுத்தனர். அவரது முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்டு, கை கால் கட்டப்பட்டிருந்தது. சிறுமியின் உடலில் கத்தியால் கீறிய காயங்களும் இருந்தன. பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியின் வீடு அருகே வசித்துவந்த டெம்போ டிரைவர் சந்தோஷ்குமார்(32) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு முதலில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், ேகாவை போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சந்தோஷ்குமார் நேற்று காலை கோவை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு நீதிபதி ராதிகா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன்  வாதாடுகையில், ‘‘கர்நாடகா,  மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பாலியல் வழக்குகள் மற்றும்  குழந்தைகள் பாலியல் வழக்குகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.  எனவே இந்த வழக்கிலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார் எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ‘‘இந்த வழக்கில் வேறு  ஒருவருக்கு தொடர்பு இருப்பது டி.என்.ஏ. பரிசோதனையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை கண்டுபிடித்து கைது செய்யும்வரை  சந்தோஷ்குமாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடாது’’ என்று கேட்டார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ராதிகா, ‘சந்தோஷ்குமார் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி’ என காலை 11 மணியளவில் அறிவித்து, ‘தண்டனை விவரம் மாலை 3 மணிக்கு வாசிக்கப்படும்’ என்று தெரிவித்தார். அதன்படி மாலையில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின்கீழ் கொலை செய்ததற்காக தூக்கு தண்டனையும், 201 பிரிவின்கீழ் தடயங்களை அழிக்க முற்பட்டதற்காக 7 ஆண்டுகள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், போக்சோ 5(எல்), 5(எம்)-ன் கீழ் இயற்கை மரணம் நிகழும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் சந்தோஷ்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த  தீர்ப்பு குறித்து அரசு வக்கீல் சங்கரநாராயணன்  நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த கடுமையான  தீர்ப்பின் மூலம் எதிர்காலத்தில் பெண் சிறார்களுக்கு இது போன்ற சம்பவங்கள்  நடப்பது தடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

மற்றொரு நபருக்கு தொடர்பு? தாய் தகவல்

கோவை போக்சோ நீதிமன்றம் முன்பு சிறுமியின் தாயுடன் அனைத்து  இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உள்பட 20 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து  கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய மற்றொருவரையும் உடனடியாக கைது செய்ய  வேண்டும் என கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து, சிறுமியின்  தாய் கூறுகையில், ‘‘எனது குழந்தையின் மருத்துவ அறிக்கைபடி இந்த வழக்கில்  மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. டி.என்.ஏ.  அறிக்கையில் இது தெளிவாக  கூறப்பட்டுள்ளது. காவல் துறையினர் உடனடியாக அந்த மற்றொருவர் யார்? என்பதை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்’’  என்றார். சிறுமியின் தந்தை கூறுகையில், ‘’இந்த  தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி  அளிக்கிறது. இதைத்தான் நாங்கள்  எதிர்பார்த்து காத்திருந்தோம். எனது மகளுக்கு  ஏற்பட்ட கொடுமை வேறு  யாருக்கும் ஏற்படக்கூடாது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற  வேண்டும்’’ என்றார்.

முதல் தீர்ப்பு

வழக்கமாக  இதுபோன்ற கொலை வழக்குகளில் புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை சில  ஆண்டுகள் இழுத்துக்கொண்டே போகும். ஆனால், இவ்வழக்கில் விசாரணைகள்  விரைவாக முடிக்கப்பட்டு, ஒன்பதே மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும், கோவையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம்தான் திறக்கப்பட்டது. நீதிமன்றம் திறக்கப்பட்டு வழங்கிய முதல் தீர்ப்பு இதுவாகும். இதற்கு அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: