குடியாத்தம்: குடியாத்தம் அருகே மினிவேனில் கடத்திய ரூ.25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சித்தூர் கேட் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடியாத்தத்தில் இருந்து சித்தூர் கேட் வழியாக ஒரு மினி வேன் வேகமாக வந்தது. இதை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் மினிவேன் நிற்காமல் மேலும் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் மினிவேனை விரட்டிச்சென்று சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள லட்சுமணாபுரம் கிராமம் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் வேனை சோதனை செய்தனர். இந்த சோதனையில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 2டன் எடை கொண்ட 21 செம்மரக்கடைகள் இருப்பது தெரியவந்தது.
