சூரிய கிரகணத்தை முன்னிட்டு 14 மணி நேரத்திற்கு பிறகு திருப்பதியில் நடை திறப்பு: தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சூரிய கிரகணத்தையொட்டி 14 மணி நேரத்துக்கு பிறகு நடை திறக்கப்பட்டு, பரிகார பூஜைகள் செய்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சூரிய கிரகணத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டு 10.40 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று சூரிய கிரகணம் நிறைவு பெற்றதை அடுத்து காலை 11.45 மணிக்கு கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் ஏழுமலையான் கோயிலை திறந்து சுத்தம் செய்து சூரிய கிரகணத்தால் ஏற்பட்ட தோஷத்திற்கு பரிகாரமாக பூஜைகளை செய்தனர்.

இதையடுத்து மார்கழி மாதத்தையொட்டி ஆண்டாள் எழுதிய திருப்பாவை சேவையுடன் தொடங்கி தோமாலை, அர்ச்சனை சேவை, பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கிரகண காலங்களில் நடை அடைக்கப்படுவதில்லை. அதன்படி, நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இக்கோயிலில் ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஐந்து தலை நாக வடிவத்தில் ராகுவாக இருப்பதாலும், ஒரு தலை நாகத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு கேது அலங்காரத்தில் ஞானபிரசூனாம்பிகை இருப்பதாலும் கிரகண காலங்களில் தரிசனம் செய்தால் பக்தர்களுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் நேற்று கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஸ்ரீகாளத்தீஸ்வரரையும், ஞானபிரசூனாம்பிகை தாயாரையும் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பூஜைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: