அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்

நாமக்கல்: அனுமன்ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாமக்கல் கோட்டையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும், மார்கழி மாத அமாவாசை, மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடந்தது. இவ்விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது.  அப்போது கோயில் முன் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சி அளித்தார்.ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வளாகம் முழுவதும் 2 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசனம் செய்ய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் 2 கட்டண தரிசனம், ஒரு இலவச தரிசனம் வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைசாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுபாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. கோயிலை சுற்றியுள்ள 3 வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருச்செங்கோடு செல்லும் அனைத்து வாகனங்களும் உழவர்சந்தை எதிர்புறம் உள்ள சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாமக்கல் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. காலை 8 மணிக்கு பிறகு சாரல் மழை நின்றதால் கோயிலில் கூட்டம் அதிகரித்தது. பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய ₹ 20 மற்றும் ₹250 கட்டணத்தில் தரிசன வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தது. ₹250 கட்டணம் அதிகம் என பக்தர்கள் பலரும் தெரிவித்தனர். இன்று இரவு வரை ஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: