வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்: 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நீடித்து வருவதால், தமிழகத்தில் 5 மாவட்டங்களில்  நேற்று மழை பெய்தது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டது. காலையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்தது. மாலை வரை இதே நிலை நீடித்தது. ஆனால் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மழை  பெய்யவில்லை.

ஆரணியை ஒட்டிய சில இடங்களில் நேற்று கனமழை பெய்தது. வேலூர், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதவிர தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: