சக்கர நாற்காலியில் அமர்ந்து தனியார் விமானத்தில் பிரக்யா சிங் தகராறு: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விளக்கம்

புதுடெல்லி: சர்ச்சைக்கு பெயர் போன பாஜ பெண் எம்பி பிரக்யா தாக்கூர், இம்முறை தனியார் விமானத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நேற்று டெல்லியில் இருந்து போபால் செல்வதற்கு பிரக்யா டிக்கெட் எடுத்து இருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன் தனது சக்கர நாற்காலியில் வந்த அவர், முன்பதிவு செய்திருந்த அவசர கால வெளியேறும் வழிக்கு அருகில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த விமான ஊழியர், அவசர கால வெளியேறும் வழி அருகே, சக்கர நாற்காலியில் வருபவர்களுக்கு இருக்கை ஒதுக்க முடியாது என்ற விமான நிறுவனத்தின் விதிமுறையை எடுத்து காட்டி விளக்கம் அளித்தார். ஆனால், பிரக்யா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்பைஸ் ஜெட் விமான நிலைய மேலாளர், அவரை சமரசம் செய்ய முயன்று தோல்வியடைந்தார். எனவே, விமானம் புறப்படுவதும் தாமதமாகி கொண்டிருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த பயணிகளில் சிலரும் பிரக்யா தாக்கூரிடம் இருக்கை மாறி அமரும்படி கோரிக்கை விடுத்தனர். இதற்கும் பலனில்லாமல் போகவே, அவரை இறக்கி விடும்படி விமான ஊழியர்களிடம் பயணிகள் கூற தொடங்கினர். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரத்துக்கு பின்னர், பிரக்யா தாக்கூர் இருக்கை மாறி அமர்ந்தார். இதனால், 45 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்டது. பின்னர், பிரக்யா தாக்கூர் விமான நிறுவனத்தின் இயக்குனரிடம், `விமான ஊழியர்கள் முன்பதிவு செய்த இருக்கையை தனக்கு ஒதுக்கவில்லை. சரியான விளக்கம் அளிக்காமல் மிகவும் ஒழுக்கம் குறைவாக நடந்து கொண்டனர்,’ என்று புகார் அளித்தார்.

Related Stories: