ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் காவலன் செயலி மூலம் 2 வக்கீல்கள் சிக்கினர்

சென்னை: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 வக்கீல்கள் உட்பட 3 பேரை  காவலன் செயலி மூலம் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண், நேற்று முன்தினம் இரவு சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் இருந்து மாநகர பஸ்சில் (தடம் எண்-15ஜி) கோயம்பேடு புறப்பட்டார். அப்போது, மது போதையில் பஸ்சில் ஏறிய 3 பேர், அந்த இளம்பெண்ணை கேலி, கிண்டல் செய்ததுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்த இளம்பெண், தனது செல்போனில் இருந்த காவலன் செயலி மூலம், இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில், சிறப்பு ரோந்து வாகனத்தில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பூக்கடை பகுதியில் வந்துகொண்டிருந்த மாநகர பஸ்சை நிறுத்தினர். பின்னர் பஸ்சில் ஏறி, இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

இதில், விருதுநகர் மாவட்டம் முகவூர் கிராமத்தை சேர்ந்த  வக்கீல் ஆனந்தராஜ் (23),  ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிராமத்தை  சேர்ந்த வக்கீல் அருள்குமார் (23), சேலம் ஆத்தூரை சேர்ந்த பொன்மணிமாறன் (24)  என தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இவர்களை  ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று  மது அருந்தி இருப்பதை உறுதி செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: