சிறையிலிருந்து வெளியே வந்து ‘ஸ்டிரைட்டாக’ சாமியார் ஆன நபர்: 40 கோடி இழந்த பக்தர்கள்

திருமலை: ஐதராபாத்தை சேர்ந்தவர் மகாதேவம்மா. இவரது மகள் கலாவதியம்மா. இவர்கள் 2 பேரும், எஸ்.ஆர்.நகர் குற்றப்பிரிவு புலனாய்வு போலீசில் கடந்த வாரம் புகார் செய்தனர். அதில் பூஜை செய்து குறைகளை தீர்ப்பதாக கூறி சாமியார் ஒருவர் தங்களிடம் 2.70 லட்சத்தை ஏமாற்றியதாக தெரிவித்தனர்.  விசாரணையில், ஆந்திராவின் கொல்லமிட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ்சிங் என்பவர்தான் அந்த சாமியார் என்று தெரியவந்தது. இவர்,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் ஆன்மிக சொற்பொழிவு மையம்  அமைத்து சொற்பொழிவாற்றி வந்தார்.  அங்கு வரும் பெண்களை குறி வைத்தும், அவர்களின் பல்வேறு குறைகளை நீக்குவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதில், ‘குழந்தை இல்லாதவர்கள், பொருளாதார நெருக்கடி உள்ளவர்கள்,  குடும்பத்தில் அமைதி இல்லாதவர்கள் தன்னை தொடர்பு கொண்டால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு  காண்பதாக’ தெரிவித்துள்ளார்.

அதனை நம்பி வந்த ஏராளமான பெண்கள் மற்றும் தொழிலதிபர்களிடம், ‘சிறப்பு பூஜைகள் செய்தால் குறைகள் தீரும்’ எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்தார். இதுதவிர சில போலி நிறுவனங்களை ஆரம்பித்து அதில்  முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பலரை நம்ப வைத்தார். அதன்படி, இவர் ஐதராபாத்தை சேர்ந்த அரவிந்த்ரெட்டியிடம் 4 கோடி உட்பட பலரிடம் சுமார் ₹40 கோடி வரை மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கிரிஷ்சிங் மீது சைபர் கிரைம்,  மீர்பேட்,  மல்கங்கிரி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார்.சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தொடர்ந்து சாமியார் என்ற பெயரில் பல்வேறு குற்றங்களை செய்து வந்தது தெரியவந்தது.

Related Stories: