பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு; பாலியல் புகாரில் சிக்கிய எம்எல்ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவு

 

பட்டியாலா: பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் சனாவூர் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா என்பவர் மீது ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி புகார் அளித்திருந்தார்.

தனக்குத் திருமணமாகிவிட்ட தகவலை மறைத்துத் தன்னுடன் பழகி ஏமாற்றியதாக அப்பெண் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குத் தொடரப்பட்ட மறுநாளே போலிசாரின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்ற அவர், கடந்த நான்கு மாதங்களாகத் தலைமறைவாகவே உள்ளார். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்தவாறு அவர் அளித்த பேட்டியில் ‘என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தால், பட்டியாலா நீதிமன்றம் நேற்று அவரைத் ‘தேடப்படும் குற்றவாளி’யாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நீதிபதி ஹர்ஜோத் சிங் கில் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். அத்துடன், தலைமறைவாக உள்ள சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது சொத்து விவரங்களை முழுமையாகத் தொகுத்து, அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: